திருத்தணி : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் சேதம் அடைந்தது. தற்போது, தரைப்பாலம் சீரமைப்பு பணிகள், நேற்று துவங்கப்பட்டன.
திருத்தணி - நாகலாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், நெமிலி - என்.என்.கண்டிகை இடையே கொசஸ்தலை ஆறு செல்கிறது.இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப் பாலத்தின் மீது, மூன்று நாட்களுக்கு முன் சென்ற வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் சேதம் அடைந்தது.இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டது. தரைப்பாலம் முழுதும் சேதம் அடைந்ததால், அவ்வழியாக பொதுமக்களும் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, நேற்று, திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தஸ்நேவிஸ் பெர்ணான்டோ, உதவி பொறியாளர் பிரபாகர் ஆகியோர் ஜே.சி.பி., இயந்திரத்துடன் மேற்கண்ட தரைப்பாலத்திற்கு சென்று சாலையை சீரமைக்கும் பணிகளை செய்து வருகின்றனர். வரும், 4ம் தேதிக்குள் பழுதடைந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.