மப்பேடு : மப்பேடு அருகே, இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த மூவர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே, சுங்குவார்சத்திரம் சாலையில், புதுப்பட்டு கிராமம் செல்லும் வழியில், நாகராஜ், 37, இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, அவரது மனைவி சத்யதேவி மற்றும் ராஜாவின் நண்பர்களான அஜீத், கார்த்திக் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.விசாரணையில், சத்யதேவி, 26, என்பவரை, கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும், தப்பியோடிய ராஜா, அஜீத், கார்த்திக் ஆகிய மூவரையும், மப்பேடு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தேடப்பட்டு வந்த மூவரும், நேற்று முன்தினம் மாலை, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.இதையடுத்து, மூவரும், நீதிபதி உத்தரவுப்படி, செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, மப்பேடு போலீசார் தெரிவித்தனர். விரைவில் மூவரையும் காவலில் எடுத்த விசாரணை நடத்த உள்ளதாக, மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.