விபத்தில் ரயில்வே ஊழியர் பலி திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த, கும்பினிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஸ்ரீராம், 27. இவர், திருத்தணி ரயில் நிலையத்தில் ரயில்வே டெக்னிஷியராக பணியாற்றி வந்தார்.கடந்த மாதம், 22ம் தேதி வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீராம் வேலைக்கு திருத்தணி ரயில் நிலையம் வந்தார். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு இரவு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்றுக் கொண்டிருந்தார்.திருத்தணி அடுத்த, கார்த்திகேயபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள வளைவில் சென்ற போது வாகனத்துடன் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார்.அவ்வழியாக சென்றவர்கள், ஸ்ரீராமை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவில் இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
செம்மரம் கடத்தியவருக்கு 'காப்பு'நகரி: சித்துார் மாவட்டம், பாகரப்பேட்டை அடுத்த, தலக்கோணை பகுதியில், செம்மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பதி வனத்துறையினர், திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திக், 32, குமாரசாமி, 38, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த, 36 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
23 டூ - வீலர்கள் திருடியவர் கைதுநகரி: சித்துார் மாவட்டம், திருச்சானுார் அடுத்த, தாமினேடு பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர்.விசாரணையில், வேலுாரைச் சேர்ந்த, சுரேஷ், 35, என்றும், மொத்தம், 23 இருசக்கர வாகனங்கள் திருடியதை சுரேஷ் ஒப்புக் கொண்டார்.இதற்கு துணையாக, புத்துார் மஸ்தான், பாகரப்பேட்டை மணிகண்டன் ஆகியோர் இருந்தனர் என, போலீசாரிடம் சுரேஷ் தெரிவித்தார்.அதை தொடர்ந்து போலீசார், 23 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். திருச்சானுார் போலீசார் சுரேஷ்யை கைது செய்தனர்.
விபத்தில் முதியவர் உயிரிழப்பு மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் அமாவாசை, 60; கூலித் தொழிலாளி.நேற்று முன்தினம், மாலை, 4:00 மணிக்கு, இவ்வூர், கிழக்கு கடற்கரை சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றார். புதுச்சேரியிலிருந்து, சென்னை சென்ற அரசு பஸ், இவர் வாகனத்தில் மோதி காயமடைந்தார்.செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், பலனின்றி, நேற்று காலை இறந்தார். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.டூ - வீலரில் பணம் 'அபேஸ்'வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, தம்மனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு, 39; கட்டுமான பணி ஒப்பந்ததாரர். இவர், நேற்றுமுன்தினம், வாலாஜாபாத் அரசுடமை வங்கியில், தன் வங்கி கணக்கில் இருந்து, 2 லட்சம் ரூபாய் பணம் எடுத்து, 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனப் பெட்டியில் வைத்தார்.வாலாஜாபாத் சதுக்கம் அருகே, இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மளிகை கடைக்கு சென்று திரும்பியபோது, வாகனத்தின் பெட்டி திறந்து, 2 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. அன்பு புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார், வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.