ஊத்துக்கோட்டை : தற்காலிக தரைபாலம் உடைந்த நிலையில், மறு கரைக்குச் செல்ல, ஆபத்தான முறையில் வெள்ள நீரில் மக்கள் நடந்து செல்லும் சம்பவம் ஊத்துக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'நிவர்' புயலால் பெய்த பலத்த மழையால், ஆந்திராவில் உள்ள பிச்சாட்டூர் நீர்த்தேக்கம் நிறைந்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.வினாடிக்கு, 11 ஆயிரம்கன அடிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நந்தனம் மற்றும் காட்டுப் பகுதியில் பெய்த மழை, ஆரணி ஆற்றில் கலந்து வந்ததால், சுருட்டப்பள்ளி அணைக்கட்டில், 6 அடிக்கு மேல் நீர் ஆக்ரோஷமாக வந்தது.இதனால், ஊத்துக்கோட்டை, ஆரணி ஆற்றில் அமைத்த தரைப்பாலம் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, போக்குவரத்து பாதித்தது.
அனந்தேரி, போந்தவாக்கம், சீத்தஞ்சேரி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில், ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மேம்பால பணி, 70 சதவீதம் முடிந்த நிலையில், அதில் கட்டப்பட்ட சாரங்கள், ஏணி வழியாக பொதுமக்கள் நடந்து சென்றனர். ஆபத்தான முறையில் பொதுமக்கள் சென்றதால், ஏணி அகற்றப்பட்டு, சாரங்கள் மீது ஏறுவது தடுக்கப்பட்டது. இதில் சிலர் போலீசாரின் கண்ணில் மண்ணை துாவி, ஆரணி ஆற்று வெள்ளத்தில் நடந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாரதி உயர் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தி, பொதுமக்கள் நலன் கருதி, மேம்பாலம் வழியாக செல்ல தற்காலிகமாக பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டார்.