சென்னை : பேசின்பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை செல்பவர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஊரடங்குவடசென்னையில், வியாசர்பாடி, சர்மா நகர், கொடுங்கையூர், மூலக்கடை, மாதவரம், மணலி, மாத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம், புழல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வருபவர்கள், பேசின்பாலம் வழியாக சென்ட்ரல், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை செல்கின்றனர். வியாசர்பாடி மேம்பாலத்தை கடந்து, பேசின்பாலத்தில் ஏறி வலதுபுறமாக திரும்பினால், இந்த இடங்களை அடைய முடியும். கொரோனா ஊரடங்கு காலத்தில், போக்குவரத்து போலீசார், வலதுபுறமாக செல்லும் வழியை அடைத்தனர்.
தற்போது, ஊரடங்கிற்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு, நாள்தோறும் சிகிச்சைக்காக பலரும் செல்கின்றனர். மாநகராட்சி அலுவலகத்திற்கு, அலுவலக பணி காரணமாக பலர் செல்கின்றனர். 'யூ டர்ன்'ஆனால், பேசின்பாலத்தில் வைக்கப்பட்ட சாலை தடுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், தங்கசாலை மேம்பாலத்தின் கீழ் சென்று, 'யூ டர்ன்' செய்து, படவேட்டம்மன் கோவில் சாலைக்கு செல்ல வேண்டி உள்ளது. அங்கிருந்து, வால்டாக்ஸ் சாலையில் பயணித்து, பேசின்பாலத்தை மீண்டும் அடைய வேண்டியுள்ளது.
இதனால், கூடுதலாக, 3 கி.மீ., துாரம் வாகன ஓட்டிகள் சுற்றிவர வேண்டியுள்ளது. குறுகலான படவேட்டம்மன் கோவில் சாலையில், அதிக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல், பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பேசின்பாலத்தில், வாகனங்கள் வலது புறமாக திரும்பி செல்வதற்கு, போக்குவரத்து போலீசார் அனுமதிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.