சென்னை : துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் துபாய்க்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர்களை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு நாடான - யு.ஏ.இ.,யின் துபாய் நகரிலிருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று காலை, 8:15 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஹசன் அலி, 23, என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அதில், அவர் அணிந்திருந்த காலணியிலிருந்து, 239 கிராம் தங்க கட்டி, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.மற்றொரு சம்பவத்தில், சென்னையில் இருந்து, துபாய் செல்லும், 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், நேற்று முன்தினம் மாலை, 4:10 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
அந்த விமானத்தில் செல்ல வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சஹூபர்சாதிக், 21, என்பவரை சோதனையிட்ட போது, அவரது கைப்பையிலிருந்து, சவுதி ரியால் மற்றும்அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாய் மதிப்பில், 6.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, சுங்கத் துறையினர்விசாரணை நடத்தி வருகின்றனர்.