அடையாறு : சில்லரை வியாபாரிகளுக்கு வினியோகம் செய்ய, 2.5 டன் போதை பொருட்களை கடத்திய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, மதுரவாயலில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதிக்கு, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக, அடையாறு காவல் துணை ஆணையருக்கு தகவல் கிடைத்தது.அவரது தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார், நேற்று மாலை, அடையாறு சிக்னல் அருகில், வாகன சோதனை நடத்தினர்.இதில், மூன்று வாகனங்களில், 2.5 டன் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருள் பாக்கெட்டுகள் இருந்தன.
இதையடுத்து, கோவில்பட்டியைச் சேர்ந்த ராமசாமி, 45, ஓட்டுனர்கள் செல்வராஜ், 27, புஷ்பராஜ், 39, இசக்கிமுத்து, 27, ஆகியோரை கைது செய்து, அடையாறு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரும் போதை பொருட்களை, மதுரவாயலில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைப்பதும், அங்கிருந்து, சென்னையில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு வினியோகம் செய்வதும் தெரிந்தது.இதில், ராமசாமி, மொத்த வியாபாரியாக செயல்பட்டுள்ளார். இவருடன் செயல்படும், கடத்தல் கூட்டாளிகளை, போலீசார் தேடுகின்றனர்.