திருவொற்றியூர் : கடல் அலையில் சிக்கி, இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை, திருவொற்றியூர், ஜான்ராவர் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜின் மகன் தருண், 11; தனியார் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்தார்.அதே பகுதியைச் சேர்ந்த, சகாரியாவின் மகன் ஜோசப், 10, ஐந்தாம் வகுப்பு படித்தார்.இவர்களின் தோழியான பூஜா என்ற சிறுமிக்கு பிறந்த நாள் என்பதால், மோனிகா, இந்திராணி உள்ளிட்ட ஐந்து பேர், நேற்று மாலை, காலடிப்பேட்டை, ஏழு குடிசை கடல் பகுதியில், பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட சென்றதாக தெரிகிறது. அப்போது, தருண் மற்றும் ஜோசப் கடலில் குளித்து விளையாடிள்ளனர்.
திடீரென தோன்றிய ராட்சத அலையில் சிக்கி, இருவரும் மாயமாகினர். சிறுமியர் கூச்சலிடவே, மீனவர்கள் அவர்களை மீட்க முயற்சித்தனர்.காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், கடலில் தத்தளித்த சிறுவர்களை நெருங்க முடியவில்லை. தகவலறிந்து, அங்கு வந்த திருவொற்றியூர் காவல் உதவி ஆய்வாளர் காதர் மீரான், மீனவர்களுடன் படகில் சென்று, மாயமான சிறுவர்களை தேடினார்.அதில், ஜோசப் மட்டும் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். தருண் உடல் மிதந்த நிலையில், அதை மீட்க படகு நெருங்குவதற்குள் மாயமானது.
திருவொற்றியூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இரு வாரங்களுக்கு முன், காசிமேடில், அலையில் சிக்கி, ஐந்து சிறுவர்கள் பலியான சோகம் மறைவதற்குள், இரு சிறுவர்கள் பலியான சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.