சென்னை : தொடர் விபத்துகளை தொடர்ந்து, 40 டன் எடை கொண்ட கனரக வாகனங்கள், சென்ட்ரல் வழியாக பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம் செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், இரவு நேரங்களில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பயணித்து வருகின்றன. இச்சாலையில், சென்ட்ரல் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டப்பட்டுஉள்ளது. இதன் மேல் பகுதியில் வாகனங்கள் செல்வதற்காக, இரும்பு தகடுகளால், தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், துறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள், இந்த இடத்தை கடக்கும் போது, பள்ளத்தில் கவிழ்ந்து வருகின்றன. இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், உயிரிழப்பு அபாயமும் உள்ளது.
எனவே, 40 டன் எடை கொண்ட வாகனங்கள், சென்ட்ரல் வழியாக பயணிப்பதற்கு, மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, சென்னை மாநகராட்சி அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து போலீசார், அவ்வழியாக வரும் கனரக மற்றும் சரக்கு வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர்.