ஆவடி : ''பணத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்,'' என, ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சிறப்பு காவல் படை போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, இரண்டாம் அணியில், 358 பேர் பயிற்சி நிறைவு செய்துள்ளனர். அவர்களது பயிற்சி நிறைவு அணிவகுப்பு, இரண்டாம் அணி கவாத்து மைதானத்தில், நேற்று மாலை நடந்தது.ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பேசியதாவது:இந்த ஆறு மாத கால கடுமையான பயிற்சியின் வெளிப்பாடு, அணிவகுப்பில் தெரிந்தது. உங்களுக்கு இந்த காவல் படை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு குடும்பமும் முக்கியம்.
அவர்கள் தான், நீங்கள் இந்த இடத்திற்கு வர முக்கிய காரணம்.ஒரு ஆயுதப்படை காவலருக்கு, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தை சந்தோஷமாக ஏற்று, சரியாக நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். 'ஆன்லைன்' சூதாட்டம் உள்ளிட்டவற்றில் செலவழித்து, பணத்தை இழக்கக் கூடாது. நிதி நிர்வாகம் குறித்து, தனியார் வங்கி வாயிலாக, காவலர்களுக்கு அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.