கே.கே.நகர் : சென்னை மாநகராட்சியில், காலியாக உள்ள இடங்கள், நீர்நிலையோரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில், மியாவகி நகர்புற காடுகள் என்ற திட்டத்தில், அடர்த்தியான மரங்கள் அடங்கிய பசுமை நிலபரப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், அடையாறு மண்டலம், கோட்டூர்புரத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், 40 வகையான, 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.வளசரவாக்கம் மண்டலம், ராயலா நகரில், 8.72 லட்சம் ரூபாய் மதிப்பில், 45 வகையான, 762 மரக்கன்றுகளும், சோழிங்கநல்லுார் மண்டலம், மாதிரி பள்ளி சாலையில், 2,800 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.கோடம்பாக்கம் மண்டலம், அசோக் பில்லர் சாலை, கே.கே.நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான, 8,399 சதுர அடி நிலத்தில், 6,450 சதுர அடியில், 9.85 லட்சம் ரூபாய் செலவில், 30 வகையான, 1,650 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இங்கு, வேம்பு, நாவல், நாகலிங்கம், பாதாம், மரமல்லி, கொய்யா, மா, பலா, செண்பகம் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இந்த நகர்புற காடுகளை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று பார்வையிட்டு, மரக்கன்றுகள் நட்டார்.