அடையாறு : அடையாறு ஆறு மற்றும் கடற்கரைக்கு அருகில், 10 மாதங்களுக்கு முன் அமைத்த, 'மியாவகி' என்ற அடர்வனம், 'நிவர்' புயலில், சிறிய பாதிப்போடு தப்பியது.
சென்னையை பசுமையாக்க, அடையாறு மண்டலம், 175வது வார்டில், 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடத்தில், ஜனவரியில், 'மியாவகி' என்ற அடர்வனம் அமைக்கப்பட்டது.அதில், மரம், செடி, கொடி வகைகள் என, 39 வகையான, 2,200 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்று வகைகளுக்கு ஏற்ப, இரண்டு அடி முதல், 30 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன.கொய்யா, முருங்கை மரமாக வளர்ந்து, காய் காய்த்துள்ளது. பெரும்பாலான மரம், செடிகளில் பூ பூத்ததால், தேனி, வண்ணத்துப்பூச்சிகள் வரத்து அதிகரித்தது.குருவி, கிளி என சில பறவைகள், மரங்களில் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றன.
இந்நிலையில், நிவர் புயலில், முருங்கை உள்ளிட்ட சில வகை மரங்கள் சாய்ந்தன. பெரிய மரங்களுக்கு ஊடாக நின்ற சிறிய வகை மரம், செடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாநகராட்சி ஊழியர்கள்,சாய்ந்த மரங்களை, நிமிர்த்தி நட்டு, வேர் பகுதிகள் வலுவாக, சுற்றி மண் போட்டு பலப்படுத்துகின்றனர். மேலும், சில மரங்களை கயிறு கட்டி நிமிர்த்தி நடப்படுகிறது.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அடையாறு ஆற்றை ஒட்டி மற்றும் கடற்கரைக்கு அருகில் அமைத்ததால், ஓராண்டு முடியாத நிலையில், புயலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என, நினைத்தோம்.
எதிர்பார்த்தது போல், அடர்வனத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. சாய்ந்த மரங்களை வலுவாக நட்டு பராமரிக்கும் பணி நடக்கிறது. அடர்த்தியாக வளர்வதால், பாதிப்பு ஏற்படவில்லை என, நினைக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.