சென்னை : சென்னையில், 'நிவர்' புயல் மற்றும் மழையின்போது, நல்ல பாம்பு, கட்டுவிரியன் உட்பட, 201 பாம்புகளை பிடித்த வனத்துறை, அவற்றை காப்புக்காடு வனப் பகுதியில் விட்டனர்.
நிவர் புயல் மற்றும் கன மழையால், புதர்களில் இருந்த பாம்புகள், குடியிருப்புகளில் புகுந்தன. பாம்புகளை பார்த்தால், அதற்கு தொந்தரவு கொடுக்காமல், தகவல் தெரிவிக்க வேண்டும் என, வனத் துறை அறிவித்திருந்தது.இதையடுத்து, பாம்புகள் குறித்து, மூன்று நாட்களில், 221 புகார்கள் பதிவாகின. குறிப்பாக, வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லுார், அம்பத்துார், குரோம்பேட்டை பகுதியில் இருந்து புகார்கள் சென்றன. பாம்புகளை பிடித்து, வனப் பகுதியில் விட, சென்னை கோட்டம், வேளச்சேரி வனத் துறை அதிகாரி எடிசன் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டன. புகார்களை பொறுத்து, ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற குழு, பாம்புகளை பிடித்தது.
இந்த வகையில், 52 நல்ல பாம்பு, 33 சாரை, 58 தண்ணி பாம்பு, 25 பச்சை பாம்பு மற்றும் கண்ணாடி விரியன், கட்டுவிரியன் உட்பட, 201 பாம்புகள் பிடிக்கப்பட்டன.இதில், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதியில் இருந்து, அதிக எண்ணிக்கையில் பாம்புகள் பிடிபட்டன. வனத்துறையினர், பிடித்த பாம்புகளை, உரிய பாதுகாப்புடன், காப்புக்காடு வனப்பகுதியில் விட்டனர்.