சென்னை : 'அரசு விடுதிகளில், அத்துமீறி நுழைந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ், வடபழநி, சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில், 16 கல்வி விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளில், சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:ஊரடங்கு காரணமாக, அனைத்து கல்வி விடுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில், அப்பகுதிகளைச் சேர்ந்த சமூக விரோதிகள் பலர், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன.
குறிப்பாக, பாதுகாவலரைமிரட்டுவது, கதவு மற்றும் ஜன்னல் கம்பிகளை திருடிச் செல்வது உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதுதொடர்பாக, அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.தொடர்ந்து, இதேபோல்சமூக விரோத செயல்கள் நடப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.