சென்னை பெருநகர் பகுதி எல்லை விரிவாக்கம், மூன்றாவது முழுமை திட்ட பணிகள், காலி பணியிடங்கள் நிரப்புதல், பணி இல்லாத பிரிவுகள் சீரமைப்பு என, சி.எம்.டி.ஏ.,வில் புதிய உறுப்பினர் செயலருக்கு சவால்கள் காத்திருப்பதாக, நகரமைப்பு வல்லுனர்கள் தெரிவித்தனர்.
சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலராக இருந்த டி.கார்த்திகேயன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, புதிய உறுப்பினர் செயலராக, எஸ்.ஜே.சிரு நியமிக்கப்பட்டார்.புதிய உறுப்பினர் செயலராக, எஸ்.ஜே.சிரு நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். உடனடியாக, சி.எம்.டி.ஏ., பணிகள் குறித்த ஆய்வையும், அவர் துவக்கி உள்ளார். இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:சென்னை பெருநகர் பகுதியின் பரப்பளவை, 1,189 சதுர கி.மீ.,யில் இருந்து, 8,000 சதுர கி.மீ.யாக விரிவாக்கம் செய்ய, அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான பணிகள் பாதியில் முடங்கியுள்ளன. சி.எம்.டி.ஏ.,வில் காலி பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
இதனால் ஏற்பட்ட பற்றாக்குறைக்கு தீர்வாக, எல்காட் நிறுவனம் வாயிலாக, தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.இவ்வாறு பணியாளர்களை நியமிப்பதில், பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன. இவற்றை தீர்க்க, புதிய உறுப்பினர் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த, 2008ல் அறிவிக்கப்பட்ட இரண்டாவது முழுமை திட்டம், முறையாக மறு ஆய்வு செய்யப்படாததால், காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மூன்றாவது முழுமை திட்டத்தை உருவாக்க, உலக வங்கி அழுத்தம் கொடுத்துள்ளது.இதற்கான பணிகளை துவங்க வேண்டியது அவசியம்.
அதே சமயத்தில், பணிகள் இல்லாமல் மெட்ரோ ரயில் பிரிவு, சாலை ரயில் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகள் உள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டியது அவசியம்.புதிதாக வந்துள்ள உறுப்பினர் செயலருக்கு, இப்பணிகள் பெரிய சவாலாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.