மாதவரம் : வடிகால் கட்டமைப்பு இல்லாததால், மழை ஓய்ந்தும், வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.
சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 26, 33வது வார்டுகளுக்குட்பட்ட, பொன்னியம்மன் மேடு, செல்லய்யா நகர், ராகவேந்திரா நகர், எலிசபெத் நகர், அன்னபூரணா நகர், முனுசாமி நகர், சுமதி நகர், சிவா கணபதி நகர், தேவி நகர், லட்சுமி நகர் என, 35க்கும் மேற்பட்ட நகர்களில், ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர்.சாலை சேதம்'நிவர்' புயல் எதிரொலியாக பலத்த மழை பெய்த போது, மழை மற்றும் மாதவரம் ரெட்டேரியில் இருந்து, வெளியேறிய உபரி நீரால், மேற்கண்ட நகர்களில், நான்கு அடி ஆழத்திற்கு, சிறிய ஏரி போல் நீர் தேங்கியது.அதனால், குடியிருப்புகள் மூழ்கின. மக்கள் வெளியில் வர முடியாமல், வீட்டிற்குள் முடங்கினர். நகர் பகுதிகளின் உட்புற சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
மாநகராட்சி நிர்வாகம், எட்டு மோட்டார்கள் மூலம், தண்ணீரை அகற்றும் பணியை துவங்கியது. ஐந்து நாட்களாக, மாதவரம், 200 அடி சாலையில் உள்ள, மழை நீர் வடிகாலில் நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. ஆனாலும், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள நீர் மட்டம் குறையவில்லை.இதனால், அங்குள்ள மக்கள், சுகாதார சீர்கேட்டாலும், விஷ பூச்சிகளின் படையெடுப்பாலும், அச்சத்திற்கு ஆளாகி தவிக்கின்றனர். அடுக்குமாடி கட்டடம்மாதவரம் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர், மாநகராட்சி அதிகாரிகளிடம், கூடுதல் மோட்டார்களை பயன்படுத்தி, நீரை வேகமாக அகற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.கூட்டமைப்பினர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது, மேற்கண்ட நகர்கள் பாதிக்கப்படுகின்றன. மாதவரம் ரெட்டேரி மற்றும், 200 அடி சாலையை ஒட்டி, பல புதிய அடுக்குமாடி கட்டடங்கள் உருவாகி உள்ளன. மேலும் உருவாகி வருகின்றன.ஆனால், அங்கு இதுவரை, மழைநீர் வடிவதற்கான நீர் வழித்தடங்கள் அமைக்கப்படவில்லை. வணிக ரீதியிலான அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளை உருவாக்குவோர், மழை பாதிப்பை தவிர்க்க, நீர் வழித்தடத்திற்காக, குறிப்பிட்ட அளவு இடத்தை விட வேண்டும்.அப்போது தான், புதிய கட்டுமானத்திற்கான அனுமதி வழங்கப்படும் என, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில், 26, 33வது வார்டுகள், நீரில் மூழ்கி, சேதம் மற்றும் உயிரிழப்புகளை சந்திக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.