உளுந்துார்பேட்டை : குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பி.டி.ஓ., பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த ராவுத்தராயன்குப்பம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒருசிலர் குடிநீர் பைப்பில் மோட்டார் இணைத்து தண்ணீர் பிடித்து வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும்பாலானோர் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பி.டி.ஓ., பன்னீர்செல்வம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், உடனடியாக மின் மோட்டார் பயன்படுத்துவோரை கண்டறிந்து மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் எடுத்த 20க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.