கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரில் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் 202 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 21 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, நேற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால், பொதுமக்கள் பலர் அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நேற்று 'தினமலர்' நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சதிஷ்குமார் உத்தரவின்பேரில், கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் நுழைவு பகுதியில் சுகாதார துறை மற்றும் நகராட்சியினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் 202 பேரை நிறுத்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம் தலைமையிலான குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், 21 பேரிடம் 4,200 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.சுகாதார ஆய்வாளர்கள் சிட்டிபாபு, குமாரசாமி, சிவகாமி, காமராஜ், ஆய்வக நுட்புனர்கள் கோபி, ராஜேஸ்வரி மற்றும் நகராட்சி கொசுப்புழு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.