சேத்துப்பட்டு : 'நிவர்' புயலில் சாய்ந்த மரங்கள் மற்றும்தேங்காய் ஓடுகளை, பயனுள்ள உரமாக மாற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 200 வார்டுகளில், தினசரி சேகரிக்கப்படும், 4,800 டன் குப்பை கழிவுகள், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. இவற்றை தரம் பிரித்து சேகரித்து, மறு சுழற்சி செய்து, உரம் தயாரிக்க வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம், மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.அதன்படி, மக்கும்மற்றும் மக்காத குப்பையை, பொதுமக்களிடம் தரம் பிரித்து, மாநகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக வாங்கிச் செல்கின்றனர். அதை உரமாக்கி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்.
அதுமட்டுமின்றி, அவ்வப்போது பலத்த காற்றுடன் பெய்யும் மழையால், சாலையில் சாயும் மரங்களையும் பயனுள்ளதாக மாற்றி, அவற்றை ஒப்பந்ததாரர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், நிவர் புயல் காரணமாக, சென்னையில் நுாற்றுக்கணக்கான மரங்கள் வேறுடன் சாய்ந்தன. அவற்றை பயனுள்ளதாக மாற்றும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து, அண்ணா நகர் மண்டல அதிகாரிகள் கூறியதாவது: அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட சேத்துப்பட்டில், மரக்கழிவுகளை உரங்களாக மாற்றும் மையம் உள்ளது.
அவற்றிற்கு, ஐந்து முதல் எட்டு வரையிலான மண்டலங்களில் இருந்து, தினசரி, 40 டன் மரக் கழிவுகள் கொண்டு வரப்படுகின்றன. நிவர் புயல் காரணமாக நான்கு நாட்களில், 260 டன் மரக்கழிவுகள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றை உரங்களாக மாற்றும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.