கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கோமுகி ஆற்றங்கரையோரம் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்ட பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறப்பித்தையடுத்து நகராட்சி மின் மயானத்தில் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில், தற்போது அந்த இடம் முழுவதும் குப்பைகள் நிறைந்துள்ளதால், இறந்தவர் உடலை தகனம் செய்ய எடுத்துச் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது பெய்த மழையினால் பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. நகராட்சி மின் மயானத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.மின் மயானத்தில் குப்பைகள் கொட்ட இடமில்லாததால், தற்போது சாலையோரத்தில் குப்பைகள் கொட்டத் துவங்கியுள்ளனர். நாளடைவில் சாலையோரத்திலும் குப்பைகள் அதிகளவில் தேங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது.எனவே, நகாட்சி ஊழியர்கள் சாலையோரம் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.