கள்ளக்குறிச்சி : சாத்தபுத்துார் ஏரி மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மனு விபரம்:சாத்தபுத்துாரில் 175 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தேங்கும் தண்ணீர் மூலம் 700 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறுவதோடு, மக்களின் குடிநீர், கால்நடை மேய்ச்சலுக்கும் ஆதாரமாக உள்ளது.இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் ஓடை துண்டிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஓடையினை பலர் ஆக்கிரமித்து கரை கட்டியுள்ளனர்.இதனால் வனப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் ஏரிக்கு வருவதில்லை. இதுமட்டுமின்றி ஏரியினை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டியுள்ளதால், தற்போது 50 ஏக்கர் மட்டுமே நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. இதனால், சாத்தபுத்துாரில் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே, சாத்தபுத்துார் ஏரி, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.