உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அரசு சார்பில் வீடு கட்டித் தரக்கோரி நரிக்குற வர்கள், அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த விருத்தாசலம் சாலையில் நரிக்குறவர் காலனியில் 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், தங்குவதற்கு வீடு இல்லாமலும் தவித்து வருகின்றனர்.பருவமழை துவங்கியுள்ள நிலையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதோடு, தங்கியிருக்கும் பகுதி முழுதும் புதர்கள் மண்டியிருப்பதால், விஷப்பூச்சிகளுக்கு மத்தியில் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது.
எனவே, அச்சமின்றி வாழ அரசு, வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என 5 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், டி.எஸ்.பி., மற்றும் தாலுகா அலுவலகங்களில் அளித்துள்ள மனுவில், கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் உளுந்துார்பேட்டை - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.