ராமநாதபுரம்:'புரெவி' புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அரபிக்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள, 3,000 மீனவர்களை மீட்க, தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள், கர்நாடக மாநிலம், மங்களூரு விரைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கான விசைப்படகுகள், அரபிக் கடலில், கர்நாடக மாநிலம், மங்களூரு, மால்பே துறைமுகங்களில் இருந்து, 260 கடல் மைல் தொலைவில், மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ளன.இந்த படகுகளில், 3,000 மீனவர்கள் உள்ளனர். இவர்கள், 'நிவர்' புயலுக்கு பின் கடலுக்கு சென்றனர். 15 நாட்கள் வரை கடலில் தங்கி, மீன் பிடித்து கரை திரும்புவர்.
கட்டுப்பாட்டு அறை
தற்போது, 'புரெவி' புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீன் பிடிப்பில் ஈடுபட்டவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில கடலுக்கு சென்றவர்கள், கரை திரும்ப இரண்டு நாட்கள் ஆகும்.அவர்களை உடனடியாக கரை திரும்ப, செயற்கைக் கோள் உதவியுடன், வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். இதில், 40க்கும் மேற்பட்ட படகுகளில், வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனம் இல்லை.இதனால், அவர்களை மற்ற படகு மீனவர்களின் உதவியுடன் தொடர்பு கொள்ள, மங்களூரில் கட்டுப்பாட்டு அறை அமைத்து செயல்படுகின்றனர்.
மீனவர்களை மங்களூரு, மால்பே துறைமுகத்திற்கு வரவழைக்க, தமிழக அரசு சார்பில், கடலுார் மாவட்ட மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் அதிகாரிகள் குழு, நேற்று மங்களூரு சென்றனர்.இது தவிர, கொச்சியில் இருந்தும் அதிகாரிகள் குழு விரைந்துள்ளது. அவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படையும், கடற்படையும் தயார் நிலையில் உள்ளன.
பேரிடர் மீட்பு குழு
கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த், நிருபர்களிடம் கூறியதாவது:புயல் எச்சரிக்கையை அடுத்து, இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட படகுகள், கரை திரும்பி விட்டன. இன்னும், 161 படகுகளில் உள்ள, 1,500 மீனவர்கள் கரை திரும்ப வேண்டும். கடலோர காவல் படை மற்றும் மீன்வளத் துறை மூலம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அருகில் உள்ள துறைமுகங்களில், கரை ஒதுங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நேற்று முதல் அவசர உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது.
ஒன்பது சிறப்பு குழுக்கள், 75 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் நிவாரண படையைச் சேர்ந்த மூன்று குழுக்கள், கன்னியாகுமரி வந்துள்ளன. நான்கு முக்கிய அணைகளும் பாதுகாப்பான நிலையில் உள்ளன. கன மழை வந்தாலும் சமாளிக்க முடியும். மூன்று நாட்கள் மழை இருக்கும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.அதனால், வீடுகளில் ஒரு வாரத்துக்கு தேவையான சமையல் பொருட்கள், காய்கறி, காஸ் போன்றவற்றை ஸ்டாக் செய்து கொள்ள வேண்டும். மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பேட்டரி போன்றவற்றை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
படகுகள் மாற்றம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் நேற்று காலை முதல் சூறாவளி வீசி, கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. புயலால் படகுகள் சேதமடைய வாய்ப்பு உள்ளதால், படகுகளை பாம்பன் தென் கடற்கரையில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது.நேற்று காலை, 11:00 மணிக்கு பாம்பன் ரயில் துாக்கு பாலம் திறந்ததும், ராமேஸ்வரம், மண்டபத்தைச் சேர்ந்த, 200க்கும் மேலான படகுகள், பாலத்தை கடந்து, பாம்பன் சின்னபாலம் கடற்கரையில் நிறுத்தப்பட்டன.
ஆனால், 800க்கு மேலான படகுகளை, பாம்பன் கொண்டு வர, ராமேஸ்வரம் மீனவர்கள் மறுத்து விட்டனர்.துாத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், பருவ மழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் தலைமையில், முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது. தென்காசியில், கலெக்டர் சமீரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனுஜார்ஜ் ஆகியோர், மூன்று இடங்களில் நேரடியாக ஆய்வு செய்தனர். திருநெல்வேலி மாவட்ட பருவமழை கண்காணிப்பு அலுவலராக, முன்னாள் கலெக்டர் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாவட்ட அதிகாரிகள் நேற்று மாலை முதல், 'வாக்கி டாக்கி'கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர்.