செஞ்சி:செஞ்சி அருகே, குடும்பத் தகராறில், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தார். மனமுடைந்த கணவரும், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆர். நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 64; விவசாயி. இவரது மனைவி குணசாலி, 59; இவர்களுக்கு, மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, வெளியூர்களில் வசிக்கின்றனர்.
முத்துகிருஷ்ணன் தம்பதி, நயம்பாடியில் நிலத்தின் அருகே வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மதியம், கணவன், மனைவி இடையே, குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில், நிலத்திற்கு சென்ற குணசாலி, வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து, மயங்கி விழுந்தார்.அவரை மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
மனைவி இறந்ததால் மனமுடைந்த முத்துகிருஷ்ணன், நேற்று அதிகாலை, 1:00 மணியளவில், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.மயங்கி விழுந்தவரை, உறவினர்கள் மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் இறந்தார்.