திருப்பூர்:முதுகுத்தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்காக, 'பேட்டரி'யில் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள் திருப்பூர் வந்துள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, முதுகுத்தண்டுவடம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கு, நவின சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. 'பேட்டரி'யில் இயங்கும் வகையில், கூடுதல் வசதிகளுடன், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிய சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது.ஆண்டுக்கு, 30 பயனாளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு, 98 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், 'பேட்டரி' சக்கர நாற்காலி பெறும் பயனாளிகளுக்கான, நேர்காணல் கடந்த வாரம் நடந்தது.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ''நடப்பு ஆண்டில், 98 பயனாளிகளுக்கு, 'பேட்டரி' சக்கர நாற்காலி ஒதுக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மூலம், 63 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 35 பயனாளிகளை கண்டறிந்து, சக்கர நாற்காலி வழங்கப்படும். வரப்பெற்ற, நவீன சக்கர நாற்காலிகள் விரைவில் வழங்கப்பட உள்ளது,'' என்றார்.