திருச்சி:வங்கி கேஷியரிடம், 74 ஆயிரம் ரூபாய் திருடிய பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதுார் அருகே, ராமச்சந்திரா நகரில் தனியார் வங்கி உள்ளது. கடந்த 10ம் தேதி, வங்கிக்கு வந்த ஒரு பெண், பணம் எண்ணிக் கொண்டிருந்த கேஷியரிடம் பேச்சு கொடுத்தார். வங்கிப் பரிவர்த்தனை தொடர்பாக, அந்தப் பெண் கேட்ட சந்தேகங்களுக்கு கேஷியர் விளக்கம் அளித்தார்.அந்தப் பெண் அங்கிருந்து சென்ற பின், கேஷியர் பெட்டியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது, 74 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது.
இது குறித்து, வங்கி மேலாளர் அளித்த புகார்படி எடமலைப்பட்டி புதுார் போலீசார், வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்போது, கேஷியரிடம் பேச்சு கொடுத்த பெண், பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரிந்தது. கேமராவில் பதிவான பெண்ணின் அடையாளத்தை வைத்து, நேற்று, எடமலைப்பட்டிபுதுார் சுந்தரம்பிள்ளை நகரைச் சேர்ந்த செல்வி, 43, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.