திண்டுக்கல்:ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய இன்ஜினியர், கல்லுாரி மாணவரை, போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணேசன், 54; மதுரையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். நவ., 25ல் மர்ம கும்பல், அலைபேசியில் இவரை தொடர்பு கொண்டு, 'திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனுார் அருகே நிலம் தொடர்பாக பேச வேண்டும்' எனக் கூறியது.அங்கு காரில் சென்ற கணேசனை, அந்த கும்பல் கடத்தியது.
கணேசனின் மேலாளர் ரேணுகாவை தொடர்பு கொண்டு பேசிய கும்பல், '40 லட்சம் ரூபாய் கொடுத்து, கணேசனை மீட்டு செல்லுங்கள்' என மிரட்டியது. அம்மையநாயக்கனுார் போலீசில், ரேணுகா புகார் அளித்தார். போலீசார் கூறியபடி, 'பணத்தை நாளை ஏற்பாடு செய்கிறோம்' என, கடத்தல் கும்பலிடம் ரேணுகா கூறினார்.
நவ., 28ல் கடத்தல் கும்பல் கூறியபடி, மதுரை தனியார் மருத்துவக் கல்லுாரி ரிங் ரோடு பகுதியில் ரேணுகா, 10 லட்சம் ரூபாயை இரண்டு பேரிடம் கொடுத்தார். அப்போது, மறைந்து இருந்த டி.எஸ்.பி., முருகன் தலைமையிலான போலீசார், இருவரையும் கைது செய்தனர். அவர்கள், மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் மருதமலை மன்னன், 22, சிவகங்கையைச் சேர்ந்த இன்ஜினியர் அஜித், 21, என்பது தெரிந்தது.
தலைமறைவாக உள்ள சிவகங்கை அருண், வடிவேல் ஆகியோர் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதும், இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.இந்நிலையில், 'கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவித்தால் தான், கணேசனை விடுவிப்போம்' என அருண், வடிவேல், போலீசாரை மிரட்டினர். அவர்கள் இருவரின் குடும்பத்தையும் பிடித்து வைத்துள்ளதாக கூறி, போலீசார் பதிலுக்கு மிரட்டினர். இதையடுத்து, கணேசனை காருடன் ஈரோடு அருகே விட்டு சென்றனர். கணேசன் மீட்கப்பட்டார்.