சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே எல்லப்பட்டியை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் முருகேசன் 45, வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முருகேசன் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கினார். அதிகாலை 2:00 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்க வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. வெளியே வந்து பார்த்தபோது வீட்டு ஜன்னலில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிச்சென்றது தெரிந்தது. குண்டு வீசியது ஸ்டோர்ரூம் பகுதி ஜன்னல் என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் வீட்டு முன் நிறுத்தப்பட்ட டூவீலர் என்ஜினில் வெடிக்காத ஒரு குண்டு கைப்பற்ற பட்டது. டி.எஸ்.பி., வினோத், நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, போலீசார், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். வேறு எங்கும் வெடிகுண்டு உள்ளதா என மோப்பநாய் 'மேக்ஸ்' சோதனையிட்டது. முன்விரோதமா அல்லது வேறு பிரச்னையா என சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.