ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் வசிக்கும் மக்கள், எளிதில் சிகிச்சை பெற, 10 மினி கிளினிக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் ஒரு மருத்துவர், நர்ஸ், உதவியாளர் கொண்ட, 2,000 மினி கிளினிக்குகள் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. வரும், 15ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என அரசு அறிவித்தது.நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி மற்றும் மலைபாங்கான தொலைதுாரத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள், அவசர சிகிச்சை பெற, ஊட்டி, குன்னுாருக்கு வர வேண்டியுள்ளது.
இதை தவிர்க்க, மலை மாவட்டத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அதிகளவில், மினி கிளினிக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, 10 மினி கிளினிக் அரசிடம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''நீலகிரி, மலை மாவட்டம் என்பதால், பழங்குடியின மக்கள் உட்பட பிற மக்களும் எளிதில் சிகிச்சை பெற, முதல் கட்டமாக, 10 மினி கிளினிக்குகள், அமைக்க, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து கூடுதல் மருத்துவ திட்டங்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.