கோவை:மொபைல் போனை வழிப்பறி செய்வதற்காக, வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கோவை கோர்ட்டில் சரணடைந்தனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ்,24. கோவை காளப்பட்டி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். கடந்த 26ம் தேதி இரவில், நண்பர் சுஜித்ரனுடன், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி ரோட்டில், பிருந்தாவன் நகர் பகுதியில் பைக்கில் சென்றபோது, நான்கு பேர் கும்பல் வழிமறித்து, விக்னேஷிடம் இருந்து மொபைல் போனை பறிக்க முயன்றனர்.மொபைல் போனை கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த கும்பல், விக்னேஷை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நீலிகோணம்பாளையத்தை சேர்ந்த அபிவிஷ்ணு,22, மசக்காளிபாளையத்தை சேர்ந்த சிங்காரவேலன்,21, ஆகியோர், கோவை ஜே.எம்:2, கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். பின், அவர்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதால், சரணடைந்த இருவரையும், 'கஸ்டடி'யில் விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.