புதுச்சேரி : போராட்டம் நடத்தும் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் ஆதரவு தெரிவித்து 72 மணி நேர போராட்டத்தை பா.ஜ., அறிவித்துள்ளது.
பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் அளித்த பேட்டி: புதுச்சேரியில் காங்., ஆட்சியாளர்கள் அளித்த 50க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு சதவீதத்தைகூட நிறைவேற்றவில்லை. உலகிலேயே அதிக போராட்டங்கள் நடக்கும் மாநிலமாக புதுச்சேரி மாறி உள்ளது. அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், அரசு சார்பு, கூட்டுறவு நிறுவன ஊழியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் போராடிக் கொண்டுள்ளனர். எமர்ஜென்சி காலத்தில்கூட ரேஷன் கடைகளை மூடியது கிடையாது. ஆனால், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டது.
குப்பைக்கும், பாதாள சாக்கடைக்கும் வரி விதித்தனர். மின்சார கட்டணத்தை உயர்த்தினர். சுடுகாட்டில் உடலை எரிக்கவும், புதைப்பதற்கும்கூட கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டம் நடத்தும் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் ஆதரவு தெரிவித்து, 72 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
பழைய பஸ் நிலையம் அருகில், வரும் 4ம் தேதியன்று காலை 9:00 மணிக்கு துவங்கும் போராட்டம், 7ம் தேதி காலை 9:00 மணி வரை நடக்கும். இதில், பா.ஜ., நிர்வாகிகள் 6 மணி நேரத்துக்கு ஒரு பிரிவாக பங்கேற்க உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.பொதுச் செயலர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், துணைத் தலைவர் விக்ரமன் உடனிருந்தனர்.