பாகூர் : கொடுத்த கடனுக்காக வீடு புகுந்து பைக், வெள்ளி குத்து விளக்குகளை பறிமுதல் செய்தது தொடர்பாக இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தவளகுப்பம், ஸ்ரீநிவாசா கார்டனை சேர்ந்தவர் ஜெயக்குமார்,34; ேஷர் மார்கெட் வர்த்தகம் செய்து வந்தார். இவருக்கு தேன்மொழி,32; என்ற மனைவி உள்ளார். தொழிலில் இழப்பு ஏற்படவே, கடன் நெருக்கடியால் சிக்கி தவித்த ஜெயக்குமார் கடந்த அக்டோபர் மாதம் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி தவளகுப்பம் காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, திருமலைவாசன் நகரைச் சேர்ந்த சிவா ஆகியோர், ஜெயக்குமாரின் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி தேன்மொழியிடம், தாங்கள் கடனாக அளித்த பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்தனர். பின்னர், அங்கிருந்த பைக், வெள்ளி குத்து விளக்குகள் மற்றும் இரண்டு தங்க வாட்சுகளை எடுத்து சென்றனர்.
இதுகுறித்து தேன்மொழி அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவா ஆகியோர் மீது தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.