ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 24 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் 'புரெவி' புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.
மாவட்டத்தில் 1500 விசைப்படகுகள், 4500 நாட்டுப்படகுகள் உள்ளன.180 கடலோர மீனவர் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மிகக்குறைந்த சர்வதேச கடல் எல்லையை கொண்டது ராமநாதபுரம் மாவட்டம்.எனவே மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க 2018 முதல் ஆழ்கடல் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப் படுகிறது. தற்போது 24 படகுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும்15 மீனவர்கள் வரை தொழில் செய்கின்றனர்.மூக்கையூர், குந்துகால், மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இவர்களின் படகுகளை நிறுத்தும் வசதி உள்ளது.
நவ.15 முதல் தொழிலுக்கு சென்ற 24 படகுகளின் மீனவர்கள் 24ல் கரை திரும்பினர். 3 படகுகள் மட்டும் அப்போது வந்தடையவில்லை.மீண்டும் மீன்பிடிக்க திட்டமிட்ட நிலையில் நிவர் புயல் எச்சரிக்கையால் செல்லவில்லை. இந்நிலையில் நவ.29ல் மற்ற 3 படகுகளும்வந்தடைந்தன. தற்போது, புரெவி புயல் எச்சரிக்கையால் 24 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.