ஒட்டன்சத்திரம் : 'ஒட்டன்சத்திரத்தில் பகுதி 'சப் வே' க்களை மழைக் காலத்திலும் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் மலையின் இருபக்கங்களிலும் ரயில்வே லைனை கடக்க சப் வே அமைக்கும் பணிகள் நடக்கின்றன. மலையின் கிழக்குப் பகுதி சப்வேயில் மழை தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி உள்ளது.இப்பகுதியில் ஓடை செல்வதாக வரைபடத்தில் உள்ளது. எனவே மழைநீர் இந்த 'சப்வே' க்குத்தான் வரும். இங்கு மேம்பாலம் கட்டினால்தான் தண்ணீர் தேங்காமல் செல்லும். ஆனால் சப்வேயை அகலம் குறைவாக கட்டுவதால் மழைக் காலத்தில் தண்ணீர் வெளியேற முடியாது. மேற்கு பகுதியில் கட்டப்படும் சப்வேயின் நிலையும் இதேபோலவே உள்ளது.
ஒட்டன்சத்திரம் வஞ்சிமுத்து கூறியதாவது: சப்வேக்கள் அகலம் குறைவாகவும், மழைநீர் வெளியேற வழியின்றி கட்டப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குழந்தை வேலப்பர் மலைக்கு கிழக்கு பகுதியில் கட்டும் சப்வே யில் ஓடை வருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலமாக கட்ட வேண்டும் அல்லது இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும், என்றார்.