திண்டுக்கல் : 'கலா உத்சவ்' கலைப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்யலாம்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 'கலா உத்சவ்' போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒன்பது முதல் 12 ம் வகுப்பு மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், பாரம்பரிய கலைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவும், வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், காண்கலை என 4 தலைப்புகளில் போட்டி நடத்தப்படுகிறது. கொரோனாவால் இந்தாண்டு போட்டிகள் ஆன்லைனில் நடத்தப்படும். உள்ளூர் தொன்மை பொம்மைகள், விளையாட்டுகள், செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற வகை என 9 தலைப்புகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். மாநில போட்டியை தொடர்ந்து தேசிய போட்டியிலும் பங்கேற்கலாம்.
தேசிய போட்டிகள் 'ஆன்லைன்'வாயிலாக நேரடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும். ஒரு மாணவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டி தேதி, விதிமுறை பின்னர் அறிவிக்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் பெயரை பள்ளிகளில் பதிவு செய்யலாம்.