திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் மழை காரணமாக வெங்காயத்தில் திருகல் நோய் பாதித்துள்ளதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் காஞ்சிரங்குளம், செங்குளம், முக்குடி, பறையன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அக்டோபரில் விதைப்பு தொடங்கி டிசம்பர் கடைசியில் அறுவடை செய்வது வழக்கம். இந்தாண்டு மழை காரணமாக வெங்காயச்செடிகளில் திருகல் நோய் பாதித்து செடிகள் சுருண்டு கீழே விழுந்ததுடன் போதிய வளர்ச்சியும் இல்லாததால் வெங்காயம் விளையவே இல்லை.செடிகளில் விதைப்பு வெங்காயம் தவிர வேறு வெங்காயம் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள்நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
நன்கு விளைச்சல் ஏற்பட்டால் ஏக்கருக்கு 150 மூடைகள் (ஒரு மூடை 55 கிலோ) வரை கிடைக்க உள்ள நிலையில் திருகல் நோய் பாதிப்பால் விளைச்சலே இல்லை. பல விவசாயிகள் மேலும் நோய் பரவாமல்இருக்க வெங்காய செடிகளில் உழவு செய்து அழித்து விட்டனர். வெங்காயத்திற்கு காப்பீடு செய்வதில் குளறுபடி இருப்பதால் விவசாயிகள் காப்பீடு செய்யவே இல்லை.காஞ்சிரங்குளம் விஜயன்விவசாயி கூறுகையில், திருப்புவனம் தோட்டகலை துறையில் வெங்காயத்தை காப்பீடு செய்ய சான்று வழங்க அலைக்கழிக்கின்றனர். நாள் முழுவதும் காத்து கிடந்தால்கூட சான்று வழங்குவது இல்லை.
திருகல் நோய் பாதிப்பிற்கு அதிகாரிகள் பரிந்துரை செய்யும் மருந்துகளை தெளித்தால் மீண்டும்அந்த நிலத்தில் வேறு விவசாயமே செய்ய முடியாமல் மண் பாழ்பட்டு விடுகிறது, என்றனர்.காஞ்சிரங்குளம் ஜெயச்சந்திரன் கூறுகையில், மாவட்டத்தின் கடைசியில் உள்ள கிராமம் இது, குடியிருப்பது சிவகங்கை மாவட்டம். விவசாய நிலங்கள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ளன. இதனால் காப்பீடு செய்ய அலைய வேண்டியுள்ளது. மதுரை மாவட்ட அதிகாரிகள் சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பதிவு செய்ய சான்று வழங்குவதில்லை.
இதனால் வருடம்தோறும் வெங்காயம் மட்டுமல்ல நெல் உள்ளிட்ட ரகங்களையும் பதிவு செய்ய முடியாமல்நாங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம், என்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் காஞ்சிரங்குளம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எல்லை பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும். வெங்காயத்திற்கு காப்பீடு செய்ய வழிகாட்டுதல் முறைகளை எளிமையாக்க வேண்டும், நோய் பாதித்த செடிகளை தோட்டகலைதுறை ஆய்வு செய்யாமலேயே மருந்துகள் பரிந்துரைப்பதை நிறுத்திவிட்டு நேரில் ஆய்வு செய்து மருந்துகள் பரிந்துரை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.