எரியோடு : நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கும் பிரச்னையில் இரு ஊராட்சி மக்கள் டிச.7-ல் ரயில் மறியல் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
நல்லமனார்கோட்டையில் ரயில்வே சுரங்கப்பாதை மேற்கூரை இல்லாமல் உள்ளது. மழை நேரத்தில் தேங்கும் நீரை வெளியேற்ற ரூ.1.25 லட்சம் செலவில் ரயில்வே சார்பில் அமைத்த டீசல் மோட்டார் திருடு போனதால் அதன்பின்னர் இப்பகுதியை யாரும் கண்டு கொள்ளவில்லை. சப்வேயில் மழை நீர் தேங்கினால் லாரி தவிர வேறு வாகனங்கள் செல்ல முடிவதில்லை. சமீபத்தில் ஒரு கார் சிக்கியது. புகார் தெரிவித்த மக்களிடம் 'சப் வே' பணி செய்தவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளதால் மேற்கொண்டு பணி செய்ய முடியவில்லை' என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் பிரச்னை முடியும் வரை அதே பகுதியில் தற்காலிகமாக ரயில்வே கேட் அமைத்து போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதற்காக மாரம்பாடி, நல்லமனார்கோட்டை ஊராட்சி பகுதி மக்கள் டிச.7-ல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.