மதுரை : கோயில்களை பாதுகாக்க பணியாளர்களை நியமிக்கும்வரை, திருக்கோயில் 'டிவி' துவக்க தமிழக அரசுக்கு தடை விதிக்க தாக்கலான வழக்கில், 'உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்' , என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மன்னார்கோவில் ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக அறநிலையத் துறையின் கீழ் 36 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்களில் அர்ச்சகர் அல்லது பூஜாரிகள் மட்டுமே உள்ளனர். அவர்களே பூஜை செய்வது, துாய்மையாக பராமரிப்பது, பக்தர்களுக்கு உணவு தயாரிப்பது உட்பட பணிகளை மேற்கொள்கின்றனர். வாட்ச்மேன்கள், துாய்மைப் பணியாளர்கள் இல்லை. இதனால் கோயில்கள் பாதுகாப்பு, பராமரிப்பின்றி உள்ளன.
கோயில்களின் முக்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ரூ.8.77 கோடியில் திருக்கோயில் 'டிவி' துவக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. முதற்கட்டமாக நம் பாரம்பரியம், கலாசாரத்திற்கு சான்றாக உள்ள கோயில்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாட்ச்மேன்கள், துாய்மைப் பணியாளர்கள் உட்பட இதர பணியாளர்களை நியமித்து, குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும். அதுவரை திருக்கோயில் 'டிவி' துவங்க மேல்நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பெரியநம்பி நரசிம்ம கோபாலன் மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு,'உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்,' என்றனர்.