மதுரை : மத்திய அரசின் அறிவிப்புகளை ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமின்றி அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விருப்பம் தெரிவித்தது.
கன்னியாகுமரி அந்தர்புரம் சதீஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:கன்னியாகுமரி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பிட்ட பகுதியை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவித்தது.மக்களிடம் கருத்து கேட்காமல் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவர். அறிவிப்பு ஆங்கிலம், ஹிந்தியில் உள்ளது. அதை தமிழ் பேசும் மக்கள் புரிந்துகொள்ள இயலாது. மத்திய அரசின் அறிவிப்பிற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு சதீஷ் மனு செய்தார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மலைப்பகுதியில் குவாரிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. குவாரிகள் துவங்க அனுமதிக்கக்கூடாது.மத்திய அரசின் அறிவிப்புகளை ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமின்றி அந்தந்த மாநில உள்ளூர் மொழிகளில் வெளியிட இந்நீதிமன்றம் விருப்பம் தெரிவிக்கிறது.மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு நோட்டீஸ் அனுப்பி டிச.,14 க்கு ஒத்திவைத்தது.