கால்பந்து சரித்திரத்தில் புதிய வரலாற்றைப் படைத்தவர் மாரடோனா. 1986 உலகக் கால்பந்து போட்டி மெக்சிகோவில் தொடங்கியது. ஜுன் 22 காலிறுதிப் போட்டி. அர்ஜென்டினா அணியின் கேப்டன் மாரடோனா இங்கிலாந்து அணிக்கு எதிராகக் களம் கண்டு கொண்டிருந்தார்.
அவருடைய ஆட்டத்தில் மெய்சிலிர்த்து காண்போர் சொக்கிப் போயிருந்தார்கள். ஏனென்றால் ஆதியும் அந்தமும் என்று சொல்வார்கள் அல்லவா! அதைப்போல, விண்ணுக்கும், மண்ணுக்கும் விழிகளை விரிய வைத்து வியக்கும் வண்ணம் முதலும், முடிவுமான எல்லா இடங்களிலும் இவரே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். அந்தப் போட்டியின்போது அமெரிக்கா தொடங்கி, அனைத்து நாடுகளின் ரசிகர்கள் வரைக்கும் 'மாரடோனா', 'மாரடோனா' என்ற இந்தப் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரையும் உச்சரிக்கவில்லை.
இங்கிலாந்தின் ஆட்டக்காரர்கள் ஓர் அரண் அமைத்து, மாரடோனாவின் பந்தைத் தடுத்தாட் கொண்ட போதெல்லாம் அந்தத் தடையை உடைத்தெறிந்து வெளியேறியது பந்து. அவரை எவ்வளவுதான் கூர்ந்து அவதானித்தாலும் கண்சிமிட்டும் நேரத்தில் அவரது மந்திரக் கால்களுக்கு இடையே பந்து மின்னலாய் ஓடி மறைந்தது. இப்படியான அவரது கால்பந்தாட்டத்தின் பயணம் பலகோடி பேரை பரம விசிறிகளாக ஆக்கியது.சர்ச்சையும் வெற்றியும்அந்த ஆட்டத்தில் அவர் அடித்த இரண்டு கோல்களும் சர்ச்சையையும், வெற்றியையும் ஒருசேர பெற்றுத் தந்தது. அவர் அடித்த முதல் கோல் ஏதோ செப்படி வித்தை செய்ததைப் போல மாயாஜாலத்தை நிகழ்த்தி முடித்திருந்தது. தலையால் முட்டித் தள்ள வேண்டிய அப்பந்தை கைகளால் கோலுக்கு அடித்தார்.
அது ரசிகர்களின் கண்ணுக்கு மட்டுமல்ல, நடுவர்களின் கண்களுக்குக் கூட ஒரு ரசவாத வித்தையை ஏற்படுத்தியது. ஆனால் இங்கிலாந்து அணியினரோ அது தவறான ஆட்டம், தலையால் அடிக்க வேண்டிய பந்தை கையால் அடித்து விட்டார் என்றனர். மறுஒளிபரப்பு செய்யப்பட்ட போது, மாரடோனாவின் தவறை காட்டியது. அந்தக் கோல் மாரடோனாவின் கைகளைத் தட்டிச் சென்றது.முதல் கோலை எப்படி அடித்தீர்கள்? என்று கேட்டபோது 'கடவுளின் கரம் விளையாடியது' என்று உண்மையை மறைக்காமலும், மறைமுகமாகவும் வெளிப்படுத்தினார் மாரடோனா. ஆனால் சற்று நேரத்திலேயே மாரடோனா அடித்த மற்றொரு கோல் வியப்பு. தனது பகுதியின் பாதி இடத்தில் இருந்து மாரடோனா பந்தைப் பெற்று வளையம் போல் அமைத்து பதினோரு தொடுதல்கள் மூலமாக மைதானத்தின் நீளத்தில் பாதியளவு முன்னேறி 5 இங்கிலாந்து வீரர்கள் மற்றும் கோல்கீப்பரைத் தாண்டிச் சென்று 60 மீட்டர் துாரத்தில் இருந்து கோல் அடித்தார்.பன்னாட்டு கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஆன்லைன் வாக்கெடுப்பில் உலகக் கோப்பை வரலாற்றில் 'நுாற்றாண்டின் சிறந்த கோல்' என்று இந்தக் கோலைத்தான் தேர்வு செய்தார்கள்.இளம்வயதில்மாரடோனாவின் இளம் வயது வாழ்க்கை வறுமையால் உழன்று கழிந்தது. எனினும் விடாமுயற்சி, தன்னம்பிக்கையோடு கால்பந்து குழுவில் சேர்ந்து தங்கச் சிறுவன் என்ற அடைமொழியுடன் பிரபல மானார். அர்ஜென்டினா தேசிய அணி 16 வயதில் அவரை வரவேற்றது. அந்த வயதில் அவர் செய்திட்ட வரலாற்றுச் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவே இல்லை. தனது 10ம் நம்பர் பனியனை அணிந்து கொண்டு, 16 வயதில் ஹங்கேரி அணிக்கு எதிராக முதல்முறையாக சர்வதேச போட்டியில் பங்கேற்றார்.மாரடோனாவின் வருகைக்கு முன்பாக கால்பந்து சக்கரவர்த்தி யாக இருந்தது பீலேதான். மாரடோனா வந்த பிறகு, சிறந்த ஆட்டக்காரர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவே இல்லை. இருந்தபோதிலும் நுாற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் மாரடோனாவுக்குத்தான் முதல் வெற்றி கிடைத்தது. இவ்விருதை தனக்கு முன்பான ஆட்டக்காரர் பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.வெற்றிப்பாதை1986ல் உலகக் கோப்பைப் போட்டியில் அர்ஜென்டினா அணியை வெற்றிப்பாதையை நோக்கிப் பயணிக்கச் செய்தார். 1990ல் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அடுத்த உலகக் கோப்பை அவருக்கு அதிர்ச்சி அளித்தது. 1994ல் போதை மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால், உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இது அவரது வாழ்க்கையின் கசப்பான காலம். எந்த பியூனோஸ் ஏனஸ் நகரில், குப்பைக்கூளங்கள் நிறைந்த தெருவில் பேப்பரை பந்தாகச் சுருட்டி விளையாடினாரோ அங்கே இறுதியாக விளையாடினார். 50,000 ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற போட்டியில் விளையாடி விடையும் பெற்றார். 2001 நவம்பர் 10 கால்பந்தாட்டப் போட்டியில் இருந்து விடைபெற்ற நாள். அவர் எப்போதும் அணிகிற பனியனின் எண்ணும் 10 தான்.1986 உலகக் கோப்பையை அர்ஜென்டினாவுக்கு வென்று தந்த போது, 5 கோல்கள் அடித்தும், 5 கோல்கள் அடிக்க உதவி புரிந்தும் விளையாட்டின் மிகச்சிறந்த தருணமாக அந்த நிகழ்வின் மூலமாக 'தங்கப்பந்து'விருதைப் பெற்றார். கூட்டத்தில் பல்லாயிரம் பேர் சட்டை அணிந்திருக்கவில்லை. உடல் முழுக்க மாரடோனா ஓவியங்கள், டாட்டூக்கள். மாரடோனா டியாகோ என்ற கூக்குரல் விண்ணைத்தாண்டி ஒலித்து கொண்டே இருந்தது.அம்மா சொன்னது'என் அம்மா சொன்னார். இந்த உலகில் நான்தான் மிகச்சிறந்தவன் என்று. அம்மா சொல்படியே வளர்க்கப்பட்டவன் நான். அம்மா சொல்வதை முழுமையாக நம்பினேன். இப்போது உங்கள் முன் சிறந்த கால்பந்தாட்ட வீரனாக நிற்கிறேன்' என்று ஒருமுறை மாரடோனா சொன்னார். அவர் தனித்தன்மையால் மட்டுமே உயர்ந்து உலகம் கொண்டாடப்படும் மாவீரனாக எழுந்து நின்றவர். 80களில் மாரடோனா கால்பந்தின் கடவுளாக கொண்டாடப்பட்டார்.அவர் மைதானத்துக்குள் நுழையும் போது ரசிகர்கள் எழுப்பும் 'கடவுள் வந்து விட்டார்' என்ற உற்சாகக் குரல் விண்ணைமுட்டும் அளவுக்கு வீறுகொண்டு எழும். மக்கள் அலைகளின் நடுவே, மாரடோனா களத்துக்குள் வருவார். மார்புக்கும், காலுக்கும் இடையில் கால்பந்தை வைத்துக் கொண்டு அவர் செய்யும் வித்தைகளைப் பார்த்து ஆர்ப்பரிக்கும் கூட்டம். இதுதான் மாரடோனா.போதை மருந்து உட்கொண்ட குற்றத்திற்காக ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மாரடோனாவின் கதை முடிந்தது என்று எண்ணி னார்கள். பல மாதங்களுக்குப் பிறகு மைதானத்திற்கு வந்த போது 'கடவுள் மீண்டும் களத்துக்கு வந்து விட்டார்' என்று மக்கள் கொண்டாடினார்கள். அந்த மாரடோனாவை இன்று கடவுளே கைக்கொண்டு அழைத்துக் கொண்டார். மண்ணில் மறைந்தாலும், மாரடோனா கால்பந்து ரசிகர்களின் நெஞ்சக்கூட்டில் என்றும் நிறைந்தே வாழ்கிறார்.-முனைவர் வைகைச்செல்வன் தமிழக முன்னாள் அமைச்சர்mlamailid@gmail.com