செம்பரம்பாக்கம் : செம்பரம்பாக்கம் ஏரியில், உபரி நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டதை அடுத்து, ஏரியை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொடர் மழையால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், 22 அடிக்கு மேல் சென்றதால், 25ம் தேதி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து, ஆறு நாட்களாக, உபரி நீர் திறக்கப்பட்டது.நீர் வரத்து குறைந்ததை அடுத்த, உபரி நீர் வெளியேற்றம், நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுபணி திலகம் மற்றும் அதிகாரிகள் ஏரியை நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது, பொதுபணி திலகம் கூறியதாவது: ஏரியின் தற்போதைய நீர் மட்டம், 22.01 அடியாகவும், கொள்ளளவு, 3.1 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. நீர்வரத்து, 103 கன அடி. சென்னையின் குடிநீர் தேவைக்காக, 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஏரியில் இருந்து, இதுவரை சுமார், 400 மில்லியன் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில், கோடையை சமாளிக்க, 9 டி.எம்.சி., தண்ணீர் கையிருப்பு உள்ளது.அடுத்து வரவுள்ள புயல் காரணமாக, கனமழை பெய்தாலும், ஏரிக்கு நீர்வரத்தை பொறுத்து, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, மீண்டும் உபரி நீர் திறந்து விடப்படும். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிக்கராயபுரம் கல்குவாரிக்கு வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. அப்பணி முடிந்தவுடன், சுமார், 25 முதல் 50 கன அடி நீர், கல்குவாரிக்கு கொண்டு செல்லப்பட்டு, தேக்கி வைக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.