ஈரோடு: கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்க அவசர கூட்டம், ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்குப்பின், கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது: பவானிசாகர் அணை, கீழ்பவானி வாய்க்கால் முற்றிலும் மண்ணால் அமைந்தவை. அதற்கேற்ப, 2,300 கன அடி நீர் மட்டுமே வாய்க்காலில் திறக்க முடியும். இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் விரிவாக்குதல், புதுப்பித்தல் எனக்கூறி, கான்கிரீட் தளம் அமைக்க டெண்டர் கேட்டுள்ளனர். அவ்வாறு அமைந்தால், நிலத்தடி நீராதாரம் இல்லாமல் போகும். பல கோடி மரங்கள் வெட்டப்படும். வாய்க்காலும் பாதிக்கும். எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கடந்த, 2012-13ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 1,450 கோடி ரூபாயில் திட்டத்தை அறிவித்தார். விவசாயிகள் எதிர்ப்பால் கைவிட்டார். பெரும்பாலான விவசாய சங்கங்கள், பாசன சபைகள் எதிர்ப்பதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும். கீழ்பவானி இரண்டாம் போகத்துக்கான நீர் திறப்பை, இப்போதே அறிவித்தால், விவசாயிகள் ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள எளிதாகும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி, தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம், நிர்வாகிகள் சண்முகம், பொடாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.