ஈரோடு: நபார்டு வங்கியின், 2021-22ம் நிதியாண்டு முன்னுரிமை கடன் திட்ட அறிக்கையை, கலெக்டர் கதிரவன் ஈரோட்டில் வெளியிட, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அபூர்வராஜன், நேற்று பெற்றுக் கொண்டார். வரும் நிதியாண்டில், 13 ஆயிரத்து, 750 கோடியே, 58 லட்சத்துக்கு, கடன் வழங்க வாய்ப்புள்ளதாக, நபார்டு வங்கி திட்டமிட்டு, வங்கிகளுக்கு முன்னுரிமை கடன் வழங்கி வழிகாட்டி உள்ளது. வேளாண் துறைக்கு, 7,692.45 கோடி ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளனர். பயிர் கடனாக, 4,041.80 கோடி ரூபாய் வழங்கப்படும். மத்திய காலக்கடனாக விவசாய உள் கட்டமைப்புக்கும் சேர்த்து, 3,650.65 கோடி வழங்க உள்ளனர். வாகனம், ஆடை தயாரிப்பு, உணவு பதனிடுதல் ஆகிய தொழில் துறைகளில், புதிய தொழில் துவங்கவும், தற்போது செய்து வரும் தொழில்களை விரிவுபடுத்தவும் அதிக வாய்ப்புள்ள, சிறு, குறு தொழில் துறைக்கு, 3,729.82 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில், 2019-20ல் வங்கிகள் மூலம் சிறு, குறு தொழில் துறைகளுக்கு, 3,095 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. வருமாண்டு மகளிர் குழுக்களுக்கு, 507 கோடி ரூபாயும், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புக்கு பெருங்கடனாக, 50 கோடி ரூபாயும் கடன் வழங்கப்படும். முத்ரா, பிரதம மந்திரி ஸ்வநிதி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அதிக கடன் வழங்க வேண்டும், என யோசனை தெரிவித்துள்ளனர்.