ஈரோடு: பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை, 40 சதவீதமாக உயர்த்த, கொ.ம.தே.க., பொது செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், அனைத்து ஜாதிகளும் ஒன்றிணைந்து, மொத்த ஜனத்தொகையில், 55 சதவீதமாக உள்ளனர். இவர்களுக்கு, 26.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பில், அதிக பாதிப்பை இப்பிரிவில் உள்ள ஜாதியினர் சந்திக்கின்றனர். பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இட ஒதுக்கீட்டில் இருந்துதான், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 20 சதவீதம் உள் ஒதுக்கீடானது. எனவே, 55 சதவீதம் உள்ள மக்களுக்கு, 26.5 சதவீத ஒதுக்கீட்டை, 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதனால் இப்பிரிவுகளில் உள்ள மாணவ, மாணவியர் கல்வி, வேலை வாய்ப்பை ஓரளவு பெறுவர். எனவே, 40 சதவீதமாக உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.