அந்தியூர்: 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தேர்தல் பிரசாரத்தில், மகளிரணி தி.மு.க., செயலாளர் கனிமொழி எம்.பி., ஈரோடு மாவட்டத்தில், பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, கவுந்தப்பாடி வந்த கனிமொழியை, பவானி ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில், 250 பேர் வரவேற்றனர். இதேபோல், ஆப்பக்கூடலில், 200 பேர் கலந்து கொண்டனர். அந்தியூர் வாரச்சந்தையில், 150 பேரும், ரவுண்டானா பகுதியில், 150 பேரும் அவருடன் சென்றனர். பின் பர்கூர்மலை துருசனாம்பாளையத்தில் நடந்த, மலைவாழ் மக்கள் சந்திப்பு குறை கேட்பு நிகழ்ச்சியில் பேசினார். இதில், 800க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் திரண்டனர். இதேபோல் பவானி அருகே தொட்டி பாளையம் ஊராட்சியில், 150 பேர் வரவேற்பு அளித்தனர். பவானி நகராட்சியில், 300 பேர் திரண்டனர். கொரோனா ஊரடங்கு விதிமீறி, ஆட்களை திரட்டியதாகவும், இதில் பங்கேற்றவர்கள் முக கவசம் அணியாமல், நோய் தொற்றை பரவும் வகையில் கலந்து கொண்டதாகவும் கூறி, கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல், அந்தியூர், பர்கூர், பவானி போலீஸ் ஸ்டேஷன்களில், தி.மு.க.,வை சேர்ந்த, 2,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.