அந்தியூர்: விவசாயியை கொன்று, வனப்பகுதியில் சடலத்தை வீசியவர்களை, கைது செய்யக்கோரி, உறவினர்கள், அரசியல் கட்சியினர், அந்தியூரில் மறியலில் ஈடுபட்டனர்.
கோபி அருகே கடம்பூர் வனப்பகுதியில், நேற்று முன்தினம், 50 வயது மதிக்கத்தக்க ஆண், கொலை செய்யப்பட்டு, நிர்வாணமாக கிடந்தார். கடத்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் பர்கூர் வனப்பகுதி, மேற்குமலை, கொங்காடையை சேர்ந்த மாதன், 50, என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மாதனுக்கு சொந்தமாக, 14 ஏக்கர் விவசாய நிலம் கொங்காடையில் உள்ளது. இது தொடர்பாக, மாதன் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த அப்பையன், கணேசன் மற்றும் முருகன் குடும்பத்தினருக்கும் தகராறு உள்ளது. இவர்கள் மிரட்டல் விடுத்ததாக, மாதன் குடும்பத்தினர், போலீசார், வருவாய் துறையினரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். நடவடிக்கை இல்லாத நிலையில், அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில், குடும்பத்துடன் மாதன், இரண்டாண்டாக வசித்து வந்தார். கடந்த, 28ம் தேதி கொங்காடை செல்வதாக, குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றவர், கடம்பூர் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் கூறினர். இந்நிலையில் மாதனை கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை, சடலத்தை பெற மாட்டோம் என்று கூறி, அவரது உறவினர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்த சிலர், அந்தியூர் தாசில்தாரிடம் நேற்று மனு அளித்தனர். பின் தாலுகா அலுவலகம் எதிரே, அந்தியூர்-பர்கூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கோபி ஆர்.டி.ஓ., ஜெயராமன், அந்தியூர் தாசில்தார் மாரிமுத்து, பவானி, சத்தி டி.எஸ்.பி.,க்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 'கொலை செய்தவர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். 'இரண்டு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்வோம்' என, அதிகாரிகள் உறுதி கூறவே, ஒரு மணி நேரத்தில், மறியல் முடிந்தது.