ஈரோடு: ஈரோட்டில், காதல் மனைவி இறந்த துக்கம் தாங்காமல், 17 நாளில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு, சாஸ்திரிநகர், வாய்க்கால் மேடு, குமரன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 25, டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி. இவரின் மனைவி சவுந்தர்யா, 23; உறவினரான இருவரும், கடந்த ஜூன், 11ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். தீபாவளிக்கு தன் தம்பி, தாய், மனைவிக்கு மணிகண்டன், புதிய துணி எடுத்தார். ஆனால், அவருக்கு எடுத்துக் கொள்ளவில்லை, சவுந்தர்யா கேட்டும், தட்டி கழித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம், 13ம் தேதி, மீண்டும் சவுந்தர்யா கேட்டும், மணிகண்டன் புதிய துணி எடுக்காததால், மன வருத்தத்தில் இருந்தார். மேலும் தீபாவளிக்கு பெற்றோர் அழைக்காத வருத்தமும் சேர்ந்து கொண்டதால், மன வேதனை அடைந்தார். இதனால், அன்றைய தினமே, வீட்டில் யாருமில்லாத நேரத்தில், தூக்கிட்டு சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மனைவி இறந்த துக்கம் தாளாமல் இருந்த மணிகண்டன், நேற்று மதியம் வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். காதல் மனைவி இறந்த வேதனையில், கணவனும் விபரீத முடிவை நாடியது, இரு தரப்பு உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.