மகுடஞ்சாவடி: கே.கே.நகரில் உழவர் சந்தை அமைக்க, மக்கள் வலியுறுத்தினர். மகுடஞ்சாவடி, கே.கே., நகரின் சுற்று வட்டார கிராமங்களான தூதனூர், நா.பாளையம், இ.காட்டூர், சாத்தம்பாளையம், பரமனூர், கொசவப்பட்டி, காடையாம்பட்டி, கஞ்சமழையூர், மெய்யனூர், மடத்தூர், இடங்கணசாலை உள்ளிட்ட கிராமங்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள், காய்கறி வாங்க, இளம்பிள்ளை சந்தைப்பேட்டையிலுள்ள உழவர் சந்தைக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு, குறித்த நேரத்துக்கு செல்ல பஸ் வசதியில்லாததால், பலர் நடந்தே செல்கின்றனர். அதேபோல், காய்கறி பயிரிடும் விவசாயிகளும், இளம்பிள்ளைக்கு செல்ல நேரிடுகிறது. இதனால், அதிக அலைச்சல், பணம் செலவாவதால், கே.கே.நகரில், உழவர் சந்தை அமைக்க, மக்கள் வலியுறுத்தினர்.