மேட்டூர்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, நவப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், நிர்வாக பிரச்னையால், விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவது, துணை பதிவாளர் ஆய்வில் தெரியவந்தது.
சேலம் மாவட்டம், கொளத்தூர், நவப்பட்டி ஊராட்சியில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. அதன் தலைவராக ராஜம்மாள், செயலராக வெங்கட்ராமன் உள்ளனர். அவர்கள் இடையே நீடிக்கும் பனிப்போரால், ஒரு வாரமாக விவசாயிகள், சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற நகை கடன், பயிர் கடன் வாங்க முடியாமல் தவித்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று, செய்தி வெளியானது. இதையடுத்து, ஓமலூர் சரக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சுருளியப்பன், நவப்பட்டி சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தலைவர் ராஜம்மாளுக்கு பதில், அவரது கணவர் ராமசாமி இருந்தார். விசாரணையில், தலைவர், செயலர் இடையே நீடிக்கும் மோதலால், விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் அலைக்கழிப்பது அம்பலமானது. பின், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை தொகை, பதவி உயர்வு குறித்த விபரம் அடங்கிய பட்டியலை ஒரு வாரத்தில் அனுப்ப வேண்டும்; விடுப்பில் இருந்த செயலர், உடனே பணியில் சேர்ந்து, காசோலையில் கையெழுத்திட்டு, விவசாயிகளுக்கு உடனே கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைவர், செயலருக்கு உத்தரவிட்டார்.