சேலம்: ''பா.ம.க., போராட்டம் காலம் கடந்து நடத்தப்படுகிறது,'' என, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறினார். சேலம் டவுனில், அ.ம.மு.க., சார்பில், கட்சி வளர்ச்சி பணி, தேர்தல் பணி குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இதற்கு தலைமை வகித்த, துணை பொதுச்செயலர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்கு அறிக்கை தயாரிப்பது, தேர்தல் பணி குறித்து, நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பா.ம.க., போராட்டம் காலம் கடந்து நடத்தப்படுகிறது. இப்போராட்டத்தை இடைத்தேர்தலின் போதே நடத்தியிருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவது குறித்து, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும். கூட்டணி குறித்து, பொதுச்செயலர் தினகரன் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் சண்முகவேலு உள்பட பலர் உடனிருந்தனர்.